Monday, September 7, 2009

பிரான்ஸில் உயர்கல்வி(1) - கேள்வி பதில்

இந்த தொடர் பதிவில் இனிவரும் சில வாரங்களுக்கு பிரான்ஸிலுள்ள பல்கலைக்கழங்களில் உயர்கல்வி கற்பதை எழுத எண்ணியுள்ளேன். எழுதத் தூண்டிய SK விற்கு நன்றி.

SK குறிப்பிட்டுள்ளதைப் போல், மேற்படிப்பிற்கு அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து தவிர்த்து மற்ற ஐரோப்பியா நாடுகளுக்கு வர எண்ணுபவர்கள் குறைவாகவே உள்ளனர். இந்த குறைவான எண்ணிக்கைக்கு மொழிப் பிரச்சனை ஒரு காரணமாக இருப்பினும், சரியான தகவல்கள் வந்து சேராமையை மிக முக்கிய காரணியாக கருதலாம்.

1. எதற்காக இந்தத் தொடர்?
மேற்படிப்பு (பட்ட மேற்படிப்பு, ஆராய்ச்சி துறை சார்ந்தவை) படிக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு அதற்குறிய சரியான தகவல்கள் உரிய நேரத்திற்க்கு கிடைக்கப்பெருமா என்பது சந்தேகமே. ஏனெனில், சரியான வாய்ப்புகளைத் தேடி சில ஆண்டுகளை கழித்தவர்களில் நானும் ஒருவன் !!!!! அதனால், நான் தற்போது இருக்கும் பிரான்சில், மேற்படிப்பு சம்பந்தமான தகவல்களை தமிழில் ஏற்கனவே பதிந்திருந்தாலும், உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான இந்தப் பதிவில் அதனை பல மாறுதல்களுடனும், சுருக்கமாகவும், கேள்வி பதில் பாணியிலும் பதிந்தால் பலரையும் சென்றடையும் என கருதுவதால் இந்தக் கூட்டு முயற்சியில் நானும் ஐக்கியம் !!!!

2. ஏன் பிரான்ஸ்?
இங்கு நிறைய நல்ல உலகத் தரம் கொண்ட பல்கலை கழகங்கள் உள்ளன. இங்கு ஆங்கில வழியிலும் பாடங்கள் குறிப்பாக சிலமுதுகலை பட்டப்படிப்பு படிக்க வாய்ப்புகள் உள்ளன. ஆனால், ஜெர்மனி அளவிற்கு அதிக எண்ணிக்கையில் ஆங்கில வழியில் முதுகலை பட்டப்படிப்புகள் இல்லை என்பதே உண்மை.

கல்விச் செலவுக்கான பெரும் பகுதியை அரசே ஏற்பதால், கட்டணத்தொகையானது மிகக் குறைவே, பெரும்பாலான சமயங்களில் முழுவதுமாக கல்விக் கட்டணம் கட்டத் தேவையிருக்காது. 25 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு, மருத்துவக் காப்பீட்டுத் தொகையையும் அரசே ஏற்றுக் கொள்ளும். இந்த வயது வரம்பை கடந்தவர்களுக்கு, கல்விக் கட்டணமும், மருத்துவ காப்பீட்டுக் கட்டணமும் சேர்த்து இரண்டு ஆண்டிற்கு அதிகபட்சமாக 700 யூரோ வரை ஆகும். (சில சமயங்களில் இரண்டு ஆண்டிற்கும் சேர்த்து, கல்விக் கட்டணம் + மருத்துவக் காப்பீட்டுத் தொகை 1000 யூரோ வரை ஆகலாம்).

பிரான்சில், சீதோசண நிலை ஒரு பெரும் பிரச்சனையா இருக்காது. அறிவியல், தொழில் நுட்பம் சார்ந்த துறைகளில் மட்டுமின்றி கலை மற்றும் மொழி சார்ந்த படிப்புகளுக்கும் பிரான்ஸ் புகழ் பெற்றது. இங்கு மேற்படிப்பு படிக்க, ஆங்கில மொழித் தேர்வு மதிப்பெண் (IELTS/TOEFL) சமர்ப்பிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவது பாடத்திட்டதிற்கு ஏற்ப வேறுபடுகிறது. (பெரும்பான்மையான படிப்புகளுக்கு ஆங்கிலப் புலமைத் தேர்வு அவசியம் இல்லை !!!!). பிரான்சில் 81க்கும் அதிகமான பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவை அனைத்தும் பிரான்ஸ் அரசின் கல்வி அமைச்சகத்தின் மேற்பார்வையிலும் கண்காணிப்பிலும் இருப்பவையாகும்.

3. கல்வி உதவித் தொகை ஏதாவது கிடைக்குமா?
தாரளமாக. நம்ம ஊர் காசுல ஏராளமாகவும் !!!

பொதுவாக, இந்த கல்வி உதவித்தொகை பற்றி பலருக்கும் இருக்கும் சந்தேகம். படிக்கிறதுக்கு யாரவது காசு தருவாங்களா? ஆம் தருவார்கள். நம் ஊரிலும் நுழைவுத் தேர்வுகள் முடித்து IISc, IIT போன்ற கல்வி நிறுவனங்களிலும் அல்லது GATE, CSIR மற்றும் NET போன்ற நுழைவுத் தேர்வுகள் முடித்து முதுகலைப்/ஆராய்ச்சிப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை மாத மாதம் வழங்கப்படுகின்றது. அதே போலத் தான் மற்ற நாடுகளிலும்.

மற்ற ஐரோப்பிய/அமெரிக்க நாடுகளைப் போலவே பிரான்ஸில் வழங்கப்படும் கல்வி உதவித் தொகையானது உங்களுடை கல்விச் செலவுக்கு மட்டுமின்றி உங்களது தனிப்பட்ட செலவுகளுக்கும் (உணவு, உடை, மருத்துவம், ஊர் சுற்றல்) போதுமானதாகவே இருக்கும். பகுதி நேர வேலைக்குச் சென்று பணம் ஈட்ட வேண்டிய அவசியம் இருக்காது. இந்த தொகையின் அளவானது படிப்பையும் (Masters/PhD), நாம் எந்த மாதிரியான உதவியின் கீழ் வருகின்றோம் என்பதனையும் பொறுத்து மாறுபடும்...

பொதுவாக முதுகலைப் படிப்பு மாணவர்களுக்கு, 600- 900 யூரோ வரை ஒவ்வொரு மாதமும் கிடைக்கும். பொதுவாக அனைத்து செலவுகளுக்கு பிறகும் பாதிக்கு மேல் சேமிக்கலாம். Erasmus Mundus கல்வி உதவித் தொகையின் கீழ் வரும் மாணவர்களுக்கு 1400 யூரோவிற்கும் மேல் வரும், இது PhD செய்யும் மாணவர்களுக்கு வரக் கூடிய கல்வி உதவித் தொகையை விட அதிகம் !!!!

4. பொதுவாக என்ன செலவு ஆகும்?
தங்கும் இடம்: மாதம் 150 - 250 யூரோ வரை (ஒருவருக்கு, நீங்கள் தேர்வு செய்யும் வசதிகளை பொறுத்து, மேலும் மற்ற ஐரோப்பிய நாடுகளைப் போலத்தான், நீங்கள் இருக்கப் போகும் ஊரை பொருத்தும் வேறுபடும் )

மருத்துவ காப்பீடு : 300 யூரோ வரை வருடத்திற்கு ஒரு முறை தான். (மருத்துவ காப்பீடு அனைவருக்கும் அவசியம்/கட்டாயம்). முதுகலைப் படிப்பு மாணவர்களுக்கு பெரும்பாலும் அவர்களுடைய மருத்துவக் காப்பீட்டுத் தொகை அவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் அமைப்பினால் கட்டப்பட்டுவிடும்.

உணவு - 100 யூரோ மாதத்திற்கு (இது மிக அதிக பட்சம், தினமும் நீங்களே சமைத்து உண்ணும் பட்சத்தில்)

தொலைபேசி அட்டை அல்லது Voip services: 10 யூரோ.

மொத்தமாக மாதம் 350 - 500 யூரோ வரை செலவு ஆகும். இது அதிக பட்சமே. இதில் தண்ணி, தம் இணைக்கப் படவில்லை. தண்ணி பிரான்சை விட உலகில் வேறு எங்கும் விலை குறைவாகவும் தரமாகவும் வகை வகையாகவும் கிடைக்குமா எனத் தெரியவில்லை. ஆகையால் கவலை வேண்டாம். !!!! :-)

5. விசா எவ்வளவு காலம் தருவார்கள் ?
நீங்கள் இந்தியாவில் முதன் முறையாக விசா பெறுகையில் மூன்று மாதம் கொண்ட 'தற்காலிக விசா' மட்டுமே கொடுக்க படும். பிறகு பிரான்ஸ் வந்தடைந்து, கல்லூரியில் இணைந்து பிறகு விசாவை நீட்டித்து கொள்ளலாம். வருடத்திற்கு ஒரு முறை இதே போல் புதுப்பிக்க வேண்டும். இது மிக எளிதான ஒன்றே. இந்த "தற்காலிக விசா" காலத்தின் அளவு தற்சமயம் மாற்றப்பட்டுள்ளதாக தெரிகின்றது.

6. விசா எடுக்க எவ்வளவு பணம் தேவைப்படும் ?
விமான கட்டணம், பெட்டி, புதுத் துணி, நல்ல shoe வாங்குற செலவு இல்லை இது !!!!!!!! அதெல்லாம் தனி...

உங்களுக்கு ஒரு பல்கலை கழகத்தில் இடம்/அனுமதி கிடைத்தவுடன் விசா வாங்க, 50 யூரோ அளவிற்கு கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும். அவ்வளவே. கல்வி உதவித் தொகையுடன் கூடிய உங்கள் பல்கலைக்கழக அனுமதியும் உங்களுடைய சான்றிதழ்களுமே விசா பெற போதுமானது.

உங்கள் படிப்பிற்கு கல்வி உதவித் தொகை இல்லையெனில்:
7200 யூரோ உங்கள் வங்கிக் கணக்கில் ஒரு மாதத்திற்கும் மேற்பட்ட சேமிப்பாக காட்டப்பட வேண்டும். (இது கல்வி உதவித் தொகை இல்லையெனில் மட்டுமே)

எதற்காக இந்த 7200 ?

இது உங்களுக்கு ஆகும் ஒரு வருட செலவு அதாவது உங்களோட தங்கும் இடம், உணவு, போன்ற செலவுகள் என்பது பிரான்ஸ் கல்வித்துறையின் கணக்கு. அதாவது ஒரு மாதத்திற்கு 600 யூரோ விகிதம் பன்னிரண்டு மாதத்திற்கு

12*600 = 7200 யூரோ என்பது அவர்கள் கணக்கு.

ஆனால், இது கல்வி உதவித் தொகையில்லாமல் இங்கு முதுகலைப் படிப்பு படிக்க விரும்புவர்களுக்கே.

7. பாட மொழி ஆங்கிலமா?
ஆங்கிலத்தில் அமைந்த முதுகலை பட்டப்படிப்புகளை நிறைய பல்கலைக் கழகங்கள் வழங்குகின்றன. நீங்கள் விண்ணப்பம் அனுப்புகையில் அதை உறுதி செய்து கொண்டு அனுப்புவது மிக நல்லது. சில பல்கலைகழகங்கள் 50 சதவிகிதம் ஆங்கிலத்திலும், 50 சதவிகிதம் பிரெஞ்சு மொழியிலும் பாடங்கள் வழங்குகின்றன.

8. மொழி அறிவு/மொழிப் புலமை எவ்வளவு முக்கியம்?
நீங்கள் இணையும் கல்லூரியில் உங்களுடைய பாடக்கல்வி ஆங்கிலத்தில் இருந்தாலும், தினசரி வாழ்க்கை அதாவது நமக்கு தேவையான பொருட்கள் வாங்கிக்கொள்ள, நண்பர்களுடன் பேச, ஊர் சுற்றச் சென்றால் மக்களுடன் உரையாட பிரெஞ்சு அறிதல் நல்லது. தெரியாவிட்டாலும் சமாளிக்கலாம். நாங்க எல்லாம் பத்து வார்த்தையை மட்டுமே வைச்சுகிட்டு சமாளிக்கலையா?? :-)

படிப்பு முடித்து இங்கேயே வேலை பார்க்க விரும்புவோர், பிரெஞ்சு மொழி கற்றுக்கொள்வது நன்மை தரும். அதே சமயம், மேற்படிப்பு படிக்க கல்வி உதவித்தொகை பெறதா மாணவர்களுக்கும் பிரெஞ்சு கற்றுக் கொள்வதன் மூலம் பகுதி நேர வேலை வாய்ப்பினை அதிகரித்துக் கொள்ளலாம். இந்தியாவில், Allience de Francaise என்னும் அமைப்பு பிரெஞ்சு மொழியினை கற்றுத்தருகிறது.

9. பிரெஞ்சு தெரிதல் விண்ணப்பிக்கும் பொழுது தேவையா?
நீங்கள் தேர்வு செய்த பாடம் ஆங்கில வழி கல்வி எனில் அவசியம் இல்லை. 50 சதவிகிதம் ஆங்கிலம்/பிரெஞ்சு எனில் தேவை. எனினும், நீங்கள் சேரும் பல்கலைகழகத்தில் சொல்லித்தருவார்கள்.

10. ஏதேனும் கன்சல்டன்சி இருக்கா?
இந்த மாதிரி நோகம நொங்கு திண்ண ஆசைப்படுபவர்களுக்கு SK சொன்ன பதிலை அங்கேயே போய் பார்க்கவும் !!!!

11. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
இளங்கலைப் படிப்பை முடித்தவர்கள் மட்டுமல்லாது, முதுநிலைப் பட்டம் பெற்றவர்களும், படிப்பு முடித்து சில காலம் பணி புரிந்தவர்களும் கூட, பிரான்சிலுள்ள பல்கலைக் கழகங்களுக்கு பட்ட மேற்படிப்பு/முதுகலை படிக்க விண்ணப்பிக்கலாம்.

12. படிச்சு முடிச்ச உடனே வேலை கிடைக்குமா?
இங்கு வேலை வாங்க பிரெஞ்சு மொழித் திறன் மிக மிக அவசியம். அது இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது. அதே சமயம், இங்கு மேற்படிப்பு படிக்க வரும் மாணவர்கள் வேறு நாடுகளில் உள்ள நிறுவங்களுக்கு பணிபுரிய வாய்ப்பும், நல்ல தரமான பல்கலைக்கழங்களில் ஆராய்ச்சி செய்ய மிக எளிதாகவும் இடமும் கிடைக்கும்.

13. பகுதி நேர வேலை வாய்ப்பு குறித்து?
கல்வி உதவித் தொகை பெற்று வருபவர்கள் பகுதி நேர வேலை செய்ய வேண்டிய தேவை இருக்காது.

கல்வி உதவித் தொகை இல்லாமல், இங்கு வருகின்றவர்கள் வாரத்தில் 20 மணி நேரம் வரை வேலை செய்ய சட்டத்தில் இடம் இருக்கின்றது. ஆனால், பகுதி நேர வேலை பார்க்க (ஏதேனும் இந்திய/தமிழக வேலைவாய்ப்பாளர்கள் தவிர்த்து ) பிரெஞ்சு மொழிப் புலமை மிக அவசியம்.

இது வரையில் உங்களுக்கு கேள்வி இருக்கும் பட்சத்தில் கீழே தெரிவியுங்கள். அடுத்த பகுதியில் பிரான்ஸில் முதுகலைப் படிக்க படிக்க எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும், யாரை அணுகலாம், போன்ற மேலதிக தகவல்களுடன் எழுதுகின்றேன்.

அன்புடன்,
பதி

16 comments:

SK September 7, 2009 at 5:56 PM  

பிரான்சிசுக்கும் ஜெர்மனிக்கும் நான் பெரிய வித்யாசமாக பார்ப்பது அங்கு கொடுக்கப்படும் உதவித்தொகை. அதுவும் மாஸ்டர்ஸ் படிக்க நிறைய உதவித்தொகை உள்ளது என்பது கூடுதல் செய்தி..

நன்றி பதி... விரிவான பதிவிற்கு.

இய‌ற்கை September 7, 2009 at 5:57 PM  

உபயோகமான பதிவு

நாமக்கல் சிபி September 7, 2009 at 6:03 PM  

பயனுள்ள பதிவு!

"ஏணிப்படிகள்" பெயருக்குப் பொருத்தமான இடுகைகள்!

மணிநரேன் September 7, 2009 at 6:24 PM  

உபயோகமான தொடர்பதிவு.

வாழ்த்துக்கள்-தொடங்கிய SK & தொடரும் பதி, இருவருக்கும்.

கையேடு September 7, 2009 at 9:03 PM  

வாழ்த்துக்கள்.. தொடருங்கள்.. பதி மற்றும் SK..

//ஆனால், இது கல்வி உதவித் தொகையில்லாமல் இங்கு முதுகலைப் படிப்பு படிக்க விரும்புவர்களுக்கே. இல்லையெனில், கல்வி உதவித் தொகையுடன் கூடிய உங்கள் பல்கலைக்கழக அனுமதியும் உங்களுடைய சான்றிதழ்களுமே போதுமானது.//

இப்பகுதியை வண்ணம் மாற்றியோ அல்லது தடிமனாகவோ போடலாம்.
7200 யூரோ என்பது மிரட்டும் தொகையாக இருக்கிறது. அது கட்டாயமல்ல என்ற பகுதியை தனியே காட்டுவது நன்று.

Rangs September 8, 2009 at 5:25 AM  

பல விஷயங்களை தெரிந்து கொண்டேன்.. என் வட்டத்திற்கு அறிமுகப் படுத்தி விட்டேன்.. நன்றிகள் பல..

அமிர்தவர்ஷினி அம்மா September 8, 2009 at 12:37 PM  

பயனுள்ள பதிவு

Prakash September 8, 2009 at 2:25 PM  

ஜூன் ஒன்றாம் தேதியில் இருந்து வீசா விதிமுறைகளில் மாற்றம் இருக்கிறது . செக் பேக் :)

எராஸ்மஸ் பற்றிய எனது விரிவான பதிவை இங்கு பார்க்கலாம்.

http://prakash-prakashism.blogspot.com/2009/07/blog-post_30.html

பதி September 8, 2009 at 3:16 PM  

SK,

ஆம். அது உண்மை தான்.
வருகைக்கு நன்றி.

இயற்கை, நன்றி :-)

நாமக்கல் சிபி, நன்றி :-)

Rangs, நன்றி :-)

அமிர்தவர்ஷினி அம்மா, நன்றி :-)

பதி September 8, 2009 at 3:18 PM  

மணி, இரஞ்சித்,

வருக்கைக்கும் கருத்துரைக்கும் நன்றி !!!!
உங்களிடம் எதிர்ப்பார்ப்பது இது போன்ற ஆலோசனைகளைத் தான், இரஞ்சித்...

பணம் சம்பந்தமாக,இடுகையினை இன்று இரவு மாற்றியிடுகின்றேன்.

பதி September 8, 2009 at 3:21 PM  

வருகைக்கும் தகவலுக்கும் நன்றி பிரகாஷ்.

விசாவிதிமுறைகளை கவனிக்கின்றேன் !!!

Erasmus Mundus பற்றிய உங்களது இடுகையினை ஏற்கனவே நண்பர்களுக்கு அனுப்பியுள்ளேன். SK வோ அல்லது நானோ அதனை இனும் பல கூடுதல் தகவல்களுடன் பதிய எண்ணியுள்ளோம்.

Subramanian Vallinayagam September 8, 2009 at 7:30 PM  

Hi

I am a post graduate and currently working as a software engineer.

I am also trying to get scholarship for my phd studies in german...


I have applied to some france universities .. but still have not received positive reply.. can you please email me, i want to contact you regarding phd studies


Subramanian
Bangalore

பதி September 9, 2009 at 1:22 PM  

வருகைக்கு நன்றி சுப்பிரமணியன்,

உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன்.

//I have applied to some france universities .. but still have not received positive reply..//

இது, நாம் யாரை எப்படி தொடர்பு கொள்கின்றோம் என்பதைப் பொறுத்து இருக்கின்றது. இந்த விசயத்தில் CV எப்படி இருக்கின்றது என்பதும் மிக முக்கியம்.

jacki September 17, 2009 at 4:40 AM  

anne it was most use ful.. thanks lot. keep going

Yathees December 7, 2009 at 11:08 AM  

Mr Pathi Kumar,

நான் phd பற்றியா தகவல்களை தெரிந்து கொள்ள இருக்கிறேன்.

1) France இல் Phd பயில எத்தனை ஆண்டுகள் ஆகும்?

2) வருடத்திற்க்கு கல்வி உதவித்தொகை எவ்வளவு கிடைக்கும் (மாதம்)?

3) இந்தியா மற்றும் பிரான்ஸில் material science பணிக்கு வரவேற்புகள் பற்றிய உங்களது கருத்துக்கள்?

பதி December 7, 2009 at 11:21 AM  

வருகைக்கு நன்றி Yathees,

நீங்கள் இந்த இடுகையினை சரியாக பார்த்தீர்களா எனத் தெரியவில்லை. நான், ஆரம்பத்தில் தனி இடுகையாக பிரான்ஸில் உள்ள அனைத்து எனக்கு தெரிந்த கல்வித் தகவல்களையும் ஒரு கலவையாக கலக்கி இட்டுள்ளேன்.

அதன் சுட்டி இங்கே,
http://pathipakkam.blogspot.com/2009/01/blog-post.html

இதில் அனைத்து கேள்விகளுக்கும் விடை இருப்பதாக எண்ணுகின்றேன்.

இருப்பினும்,

//1) France இல் Phd பயில எத்தனை ஆண்டுகள் ஆகும்?//

பொதுவாக மூன்று ஆண்டுகள்.. சில மாதங்கள் அதிகமாக ஆக வாய்ப்புகள் உண்டு. அது பொதுவாக, பாடத் திட்டம், மேற்பார்வையாளர், மாணவரின் திறன் சார்ந்த ஒன்று.

//2) வருடத்திற்க்கு கல்வி உதவித்தொகை எவ்வளவு கிடைக்கும் (மாதம்)?//

மாதம், வரி செலுத்தியது போக, 1300 யூரோவிலிருந்து 1700 வரை கிடைக்கும். இது எந்த கல்வி உதவித் தொகையின் கீழ் ஒரு மாணவர் தனது ஆய்வினை துவங்குகின்றார் என்பதை பொருத்தது.

//3) இந்தியா மற்றும் பிரான்ஸில் material science பணிக்கு வரவேற்புகள் பற்றிய உங்களது கருத்துக்கள்?//

மன்னிக்கவும். மொதுவாக ஒரு துறையைப் பற்றி கருத்துக் கூறும் அள்விற்கு நான் இன்னும் வளரவில்லை !!!! ஆனால், எனக்குத் தெரிந்தவரை, ஆய்வுப் பணியை முடித்த எவரும் வேலை கிடைக்க பெரும் சிரமம் எதுவும் மேற்கொண்டதில்லை.

மேலும் தகவல்கள் தேவைப்படின் தனிமடல் இடவும்...

  © Blogger template 'Fly Away' by Ourblogtemplates.com 2008

Back to TOP