Friday, December 18, 2009

கல்வி உதவித்தொகை அறிவிப்பு

இயக்குநர், அரசு பள்ளிக்கல்வித்துறையினால் வழங்கப்படும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் நேரிடையாக பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைக்கான அறிவிப்பு.

குறிப்புகள் :
௧டந்த மார்ச் 2009 நடந்த பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும். மதிப்பெண் குறித்த அட்டவணை இணைத்துள்ள அறிவிப்பில் காணலாம்.

அறிவியல், வரலாறு, வணிகவியல், வொகேஷனல் என்று அனைத்து பிரிவில் இருந்தும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் சென்று சேரவேண்டிய கடைசி தேதி : 24 . 12 . 2009


மேலும் விவரங்கள்
இணைத்துள்ள கோப்பிலும்,
உடன் இதற்கான விண்ணபங்களை கீழ்க்கண்ட தமிழ்நாடு அரசு இணையத்தளத்திலிருந்து தரவிறக்கிக்கொள்ளலாம்
http://www.tn.gov.in/dge

முக்கியகுறிப்பு: இந்தப்பதிவினை படிப்பவர்கள் முடிந்தமட்டிலும் தேவைப்படுவோரிடம் பகிருங்கள்.

Monday, October 5, 2009

இளநிலைப்பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு மற்றும் உதவித்தொகை அறிவிப்பு பகிர்வு

உதவித்தொகை அறிவிப்பு

இந்திய ரிசர்வ் வங்கி, 150 இளநிலைப் பட்டதாரிகளுக்கான தனது உதவித்தொகையினைப் பற்றிய அறிவிப்பினை கீழ்க்கண்ட இணையதளத்தினில் வெளியிட்டள்ளது.

Website: www.rbi.org.in/youngscholars.aspx

ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி தேதி: 21.10.2009

Selection test for the RBI young scholars’ award will be held on January 10,2010.

இளநிலை பட்டதாரிகள் எந்த துறையில் இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு 18 முதல் 23 .

இது 5 அக்டோபர் தேதி இட்ட ஹிந்து நாளிதழிலும் வெளிவந்தது உள்ளது.
நன்றி : தி hindu .

வேலைவாய்ப்பு:

2008 - 2009ல் பி.ஈ, பி.டெக், எம்.சி.ஏ, எம்.எஸ்ஸி படித்த பட்டதாரிகளுக்கு ஃபோர்டு நிறுவனம் தனது வேலைவாய்ப்பினை அறிவித்துள்ளது.

www.india.ford.com/careers

மேலதிக தகவலுக்கு கீழே இருக்கும் படத்தினை கிளிக்கி பெரிதாக்கி விபரம் அறிந்துகொள்ளவும்.



நன்றி: மெயிலில் இந்த தகவலை பகிர்ந்த நண்பருக்கு.

இந்தப் பதிவினைப் படிப்பவர்கள் மேற்கூறியுள்ள தகவல்களை தேவைப்படுபவர்களிடம், அறிந்தவர்களிடம், தெரிந்தவர்களிடம் பகிருங்கள். காதுள்ளவன் கேட்கக் கடவன் என்பதைப் போல, தேவையுள்ளவர்கள் பயன்பெற்றுக்கொள்ளட்டும். அதுவே இந்தப் பதிவின் நோக்கம்.

Thursday, September 24, 2009

விப்ரோ வேலை வாய்ப்பு மேலும் ஜெர்மன் மேல் படிப்பு

விப்ரோ (Wipro) நிறுவனம் 2010 ஆம் ஆண்டு B.Sc.,(CS/IT/Electronics/Physics/Mathematics/Statistics)/BCA/BCM தேர்வு பெரும் மாணவர்களுக்கு படிப்புடன் கூடிய வேலை வழங்குகிறது. அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலதிக விவரங்கள் இணைக்கப்பட்டுள்ள படத்தில்.



~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
DAAD எனப்படும் ஜெர்மன் வெளிநாட்டு கல்விக்கு உதவி புரியும் அமைப்பு அக்டோபர் பத்தாம் தேதி அன்று சென்னையில் ஒரு நாள் 'ஜெர்மனியில் கல்வி' தொடர்பான கருத்தங்கம் நடத்துகிறது. விருப்பம் உள்ளவர்கள் கீழ் கண்ட முகவரிக்கு சென்று உள்ளே செல்ல தேவையான நுழைவுச்சீட்டு பெற்றுக்கொள்ளலாம்.

22/09/2009 and 1/10/2009 இடைப்பட்ட தேதியில் செல்ல வேண்டும்.

Goethe-Institut / Max Mueller Bhavan,
4 Rutland Gate 5th Street,
Chennai 600 006,
Nungambakkam, between 22/09/2009 and 1/10/2009.

மேலதிக விவரங்களுக்கு இந்த சுட்டியைப்பார்க்கவும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இது கல்வி தொடர்பான செய்தி இல்லை என்றாலும், மனிதம் தொடர்பான செய்தி.

ஜெய்பூர் பூட்ஸ் (Jaipur Foots) அமைப்பு அக்டோபர் 6 மற்றும் 7 தேதிகளில் சென்னையில் தனி கேம்ப் நடத்துகிறது. மாற்றுக்கால்கள் இலவசமாக விநியோகம் செய்யப்படுகின்றன.

மேலதிக விவரங்களுக்கு இணைக்கப்பட்டுள்ள படத்தை பார்க்கவும்.



ஜெய்பூர் பூட்ஸ் குறித்து இந்த பதிவில் அறியலாம்.

நன்றி மெயில் அனுப்பிய தோழிக்குமற்றும் தோழருக்கு.

அன்புடன்
எஸ். கே.

Monday, September 21, 2009

பிரான்ஸில் உயர்கல்வி 2 கேள்வி பதில் மற்றும் மேலதிக விவரங்கள்

பிரான்ஸ் உயர்கல்வி சம்பந்தமாக எழுதப்பட்ட பகுதி ஒன்று

'எந்தெந்த நகரங்கள் படிக்க ஏற்றவைகள் (சீதோஷணம்,கட்டணம் குறைவு--போன்றவை) ?

நகரங்களைப் பொறுத்து கல்வித் தரம் வேறுபடுவது இல்லை. கட்டணங்களும் அவ்வாறே. தேர்ந்தெடுக்கப் போகும் தனிப்பட்ட துறைகளைப் பொறுத்து உங்கள் பல்கலைக் கழகத்தின் தரப் பட்டியல் வேறுபடலாம். சீதோஷணம் நகரத்தைப் பொறுத்து வேற்படும்.

எந்த வகையான துறைகளை தேர்வு செய்யலாம் ?

கலை, அறிவியல், தொழில்நுட்பம், பொருளாதாரம், உயிர்த் தொழில்நுட்பம், மேலாண்மைப் படிப்புகள் என பல்வேறு வகையான துறைகளையும் உங்களது விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்யலாம்.

அனைத்துவகையான கல்வித் துறைகளுக்கும் ஒரே மாதிரியான கல்வி உதவித் தொகை தான் கிடைகின்றது, அல்லது அனைத்தும் சற்றேறக்குறைய ஒரே தரத்தில் தான் இருக்கும்.

இந்திய சாப்பாட்டு வகைகள், சமைக்க தேவையான பொருட்கள் கிடைக்குமா ?

புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள்/பாண்டிசேரியை சார்ந்தவர்கள் அனைத்து நகரிலும் பல்பொருள் அங்காடி மட்டும் உணவு விடுதிகளை நடத்துகின்றனர். ஆகையால், அனைத்துப் பொருட்களும் எளிதாகவும் தரமாகவும் கிடைக்கும். பாரீஸ் போன்ற பெரும்நகரில், நமது ஊரில் எளிதில் கிடைக்காத சில பொருட்கள் கூடக் கிடைக்கும். !!!!!

பிரெஞ்சு மொழி எங்கு கற்பது?

பிரான்ஸ் வந்த பிறகு, உங்களது பல்கலைக் கழகத்திலேயே அதற்கான வசதிகள் இருக்கும்.

பிரெஞ்சு பல்கலைகழகங்கள் பற்றிய ஒரு சிறிய/எளிய அறிமுகம்

ஜெர்மனியிலோ அல்லது வேறு சில நாடுகளில் உள்ளவற்றைப் போல இங்கிருக்கும் பல்கலைக் கழகங்களை தரம் பிரித்தல் என்பது அவ்வளவு எளிதான ஒன்று அல்ல. அந்த அடிப்படையில் பேசுவதை இங்கிருக்கும் பலர் விரும்புவதும் இல்லை என்பது தான் உண்மை.

ஆனால், இஞ்னீயரிங்/தொழில்நுட்ப படிப்புகளைப் பொருத்த வரை, Ecole Polytechnique எனத் துவங்குபவையும், பொருளாதர மேலாண்மைப் படிப்புகளைப் பொருத்த வரை Hautes Études Commerciales எனத் துவங்குபவையும் பெருமைக்குறிய கல்வி நிலையங்களாக கருதப் படுகின்றது.

இங்கு ஒவ்வொரு பல்கலைக் கழகமும் அது இருக்கும் ஊரின் பெயரிலேயே பெயரிடப்பட்டிருக்கும்.

பிரான்ஸில் செமஸ்டர் அல்லது கல்வியாண்டு செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் துவங்கும், இது ஜூலை இரண்டாவது வாரத்தில் முடிவடையும். இதனை இரண்டு செமஸ்டர்களாகப் பிரித்து இடையில் தேர்வுகள் நடத்தப்படும்.

இதற்கான விண்ணப்பிக்க கடைசி நாட்கள் பல்கலைக்கழகங்களைப் பொருத்தும், எந்த கல்வி உதவித் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கின்றீர்கள் என்பதைப் பொறுத்தும் வேறுபடும்.

ஜூலை மூன்றாம் வாரத்திலிருந்து ஆகஸ்ட் மாத கடைசி வரை விடுமுறை. ஒரே நாடே விடுமுறையில் இருப்பதை காண விரும்புவர்கள் அல்லது கேள்விப்பட்டிராதவர்கள் இந்தக் குறிப்பிட்ட காலப் பகுதியிலிருந்து அதனை ரசிக்கலாம் !!!!!!! :-))

எங்கிருந்து, எப்படித் தகவல்களை பெருவது?

இதனை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம்

I) பிரான்ஸிலிருக்கும் பல்வேறு வகையான படிப்புகளையும், அதன் வரையரைகளையும் விரிவாக தெரிந்து கொள்ள EduFrance என்னும் அமைப்பு உதவுகிறது. இது, Allience de Francaise ன் ஒரு அங்கமாகும். இவர்களின் இணைய முகவரிகள்

http://www.india-campusfrance.org/

www.edufrance.fr/en/

இந்த EduFrance அமைப்பானது இந்தியாவில் ஏழு இடங்களில் (சென்னை, பெங்களூரு, அஹமதாபாத், சண்டிகார், மும்பை, புது தில்லி, பூனே) அமைந்துள்ளது.

இவர்கள், பிரான்சின் கல்வி முறைகளைப் பற்றியும், அதற்கு விண்ணப்பிக்கும் முறைகளையும் மற்றும் கல்வி உதவித் தொகைப் பெறுவதற்கும் ஆலோசனை வழங்குவார்கள். இந்த அமைப்பினை, மின்னஞ்சல், தொலைபேசி அல்லது நேரிலோ தொடர்பு கொள்ளலாம். இவர்களின் மேற்குறிப்பிட்டுள்ள இணைய முகவரிகளை தொடர்ந்து கவனித்து வரவும்.

மேற்குறிப்பிட்டுள்ள வழிமுறைகள், நீங்களே நேரடியாக பல்கலைகழகத்தில் அனுமதி வாங்கிச் செல்வது.

II) இந்தியாவில் தமிழகத்தில் உள்ள சில பல்கலைகழகங்களும் கல்லூரிகளும் பிரான்சில் உள்ள சில பல்கலைகழங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டுள்ளன. அவர்கள் மூலமாகவும் பட்ட மேற்படிப்பு படிக்க பிரான்ஸ் செல்லாம்.

[உதாரணம் : 1) லயோலா கல்லூரியின் உயிர்த் தொழில் நுட்பத்துறையினர் (Biotechnology department, Loyala college) பிரான்சின் லீல் பல்கலைக் கழகத்துடன் (University of Lille) புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளனர்

2) வேலூரிலுள்ள VIT கல்வி நிறுவனம், பிரான்ஸில் உள்ள Rouen, Compiegne, Perret, Orsay, Villejuif மற்றும் Paris ஆகிய நகரங்களிலுள்ள பல்வேறு பல்கலைக் கழகங்களுடன் உப்பந்தங்களை கைச்சாட்டிட்டுள்ளனர்].

அதேபோல, நீங்கள் தற்பொழுது படித்துக் கொண்டுள்ள கல்வி நிறுவனம் இது போன்ற ஏதாவது ஒரு பிரான்ஸ் பல்கலைக் கழகத்துடன் ஒப்பந்தம் ஏற்படுத்தியிருக்கும் பட்சத்தில், உங்களுடைய பட்ட மேற்படிப்பின் ஒரு பகுதியையோ, 6 மாதப் படிப்பையோ அல்லது ஒரு ஆண்டு படிப்பையோ (உங்களுடைய படிப்பு 2 ஆண்டுகளாக இருக்கும் பட்சத்தில்) பிரான்சில் கல்வி உதவித்தொகையுடன் தொடரலாம்.

இந்த வழிமுறைகளை நீங்கள் உங்கள் பல்கலைக் கழகங்கள்/கல்வி நிறுவனங்களின் மூலமாகவே மேற்கொள்ளலாம்.

தகவல் வழங்கும் இணையதளங்கள்:

ஒவ்வொரு ஆண்டும், பட்ட மேற்படிப்புக்கு, கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இது தொடர்பான தகவல்களை நீங்கள் கீழ்கண்ட இணையதள முகவரிகளிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

http://www.france-in-india.org/en/

மற்றும், http://www.egide.asso.fr/jahia/Jahia/lang/en/accueil/etudiants

http://www.education.gouv.fr/cid1012/programme-erasmus.html

http://www.ifan.in/index.php?option=com_content&task=view&id=117&Itemid=47

கணிணி, கணிதவியல் மற்றும் மின்னனுவியல் துறை சார்ந்த மாணவர்களுக்கு (Applied Mathematics, Computation, Simulation Algorithmics, Programming, Software, Architecture, Networks, Systems, Services, Distributed Computing, Perception, Cognition, Interaction, Computational Sciences for Biology, Medicine and the Environment)

http://www.inria.fr/travailler/stage/index.en.html

உயிரியல், மருத்துவம், உயிரித் தொழில்நுட்பம் (biological, medical and public health research) போன்ற துறை சார் படிப்புகளுக்கு

http://www.inserm.fr/en/inserm/

ஏதேனும் சந்தேகங்கள் இருக்கும் பட்சத்தில் இங்கு தெரியப்படுத்தவும். முடிந்த வரை விசாரித்துச் சொல்கிறேன்.

அன்புடன்,
பதி

Friday, September 18, 2009

உதவித்தொகைகள் அறிவிப்பு

1. Fair and Lovely Foundation

தகுதி :

a. பெண்களுக்கு மட்டுமே

b. +2 முடித்து மேற்படிப்பு படிக்க

c. ஆங்கில திறமை இருக்க வேண்டும்.

கடைசி தேதி :

30 செப்டம்பர் 2009

மேலும் விவரங்களுக்கு இந்த சுட்டியை சொடுக்கவும்.

என்னை பொறுத்தவரை இது மிகவும் நல்ல ஒரு வழி. இவர்களே படிப்பு முடியும் வரை உதவி செய்கிறார்கள்.

வருடத்திற்கு ஒரு லட்சம் வரை உதவித்தொகை தருகிறார்கள்.

உங்களுக்கு தெரிந்த பெண் குழந்தைகள், கல்விக்கு உதவி தேவை படின் தெரியப்படுத்தவும்.

2.IndianOil Academic Scholarships

தகுதி :

10 முடித்து +2 படிப்பதில் இருந்து, இன்ஜினியரிங், மருத்துவம், MBA அனைத்து படிப்பிற்கும் வழங்குகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு இந்த சுட்டியை சொடுக்கவும்

கடைசி நாள் :

30 செப்டம்பர் 2009

இன்ஜினீயரிங், மருத்துவம், MBA போன்ற படிப்பிற்கு மாதம் 2000 ரூபாயும், +௨ படிக்க மாதம் 1500 ரூபாயும் வழங்குகிறார்கள்.

முடிந்தவரை நண்பர்களுடன் பகிருங்கள்.

அன்புடன்
எஸ். கே.

குறிப்பு :

இந்த கடை காத்து வாங்குது. ஆகவே நிறைய வாசகர்களை உள்ள பதிவர்கள் முடிந்தால் இதை இன்னும் நிறைய பேருக்கு தெரியப்படுத்தவும். நன்றி.

Monday, September 7, 2009

பிரான்ஸில் உயர்கல்வி(1) - கேள்வி பதில்

இந்த தொடர் பதிவில் இனிவரும் சில வாரங்களுக்கு பிரான்ஸிலுள்ள பல்கலைக்கழங்களில் உயர்கல்வி கற்பதை எழுத எண்ணியுள்ளேன். எழுதத் தூண்டிய SK விற்கு நன்றி.

SK குறிப்பிட்டுள்ளதைப் போல், மேற்படிப்பிற்கு அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து தவிர்த்து மற்ற ஐரோப்பியா நாடுகளுக்கு வர எண்ணுபவர்கள் குறைவாகவே உள்ளனர். இந்த குறைவான எண்ணிக்கைக்கு மொழிப் பிரச்சனை ஒரு காரணமாக இருப்பினும், சரியான தகவல்கள் வந்து சேராமையை மிக முக்கிய காரணியாக கருதலாம்.

1. எதற்காக இந்தத் தொடர்?
மேற்படிப்பு (பட்ட மேற்படிப்பு, ஆராய்ச்சி துறை சார்ந்தவை) படிக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு அதற்குறிய சரியான தகவல்கள் உரிய நேரத்திற்க்கு கிடைக்கப்பெருமா என்பது சந்தேகமே. ஏனெனில், சரியான வாய்ப்புகளைத் தேடி சில ஆண்டுகளை கழித்தவர்களில் நானும் ஒருவன் !!!!! அதனால், நான் தற்போது இருக்கும் பிரான்சில், மேற்படிப்பு சம்பந்தமான தகவல்களை தமிழில் ஏற்கனவே பதிந்திருந்தாலும், உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான இந்தப் பதிவில் அதனை பல மாறுதல்களுடனும், சுருக்கமாகவும், கேள்வி பதில் பாணியிலும் பதிந்தால் பலரையும் சென்றடையும் என கருதுவதால் இந்தக் கூட்டு முயற்சியில் நானும் ஐக்கியம் !!!!

2. ஏன் பிரான்ஸ்?
இங்கு நிறைய நல்ல உலகத் தரம் கொண்ட பல்கலை கழகங்கள் உள்ளன. இங்கு ஆங்கில வழியிலும் பாடங்கள் குறிப்பாக சிலமுதுகலை பட்டப்படிப்பு படிக்க வாய்ப்புகள் உள்ளன. ஆனால், ஜெர்மனி அளவிற்கு அதிக எண்ணிக்கையில் ஆங்கில வழியில் முதுகலை பட்டப்படிப்புகள் இல்லை என்பதே உண்மை.

கல்விச் செலவுக்கான பெரும் பகுதியை அரசே ஏற்பதால், கட்டணத்தொகையானது மிகக் குறைவே, பெரும்பாலான சமயங்களில் முழுவதுமாக கல்விக் கட்டணம் கட்டத் தேவையிருக்காது. 25 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு, மருத்துவக் காப்பீட்டுத் தொகையையும் அரசே ஏற்றுக் கொள்ளும். இந்த வயது வரம்பை கடந்தவர்களுக்கு, கல்விக் கட்டணமும், மருத்துவ காப்பீட்டுக் கட்டணமும் சேர்த்து இரண்டு ஆண்டிற்கு அதிகபட்சமாக 700 யூரோ வரை ஆகும். (சில சமயங்களில் இரண்டு ஆண்டிற்கும் சேர்த்து, கல்விக் கட்டணம் + மருத்துவக் காப்பீட்டுத் தொகை 1000 யூரோ வரை ஆகலாம்).

பிரான்சில், சீதோசண நிலை ஒரு பெரும் பிரச்சனையா இருக்காது. அறிவியல், தொழில் நுட்பம் சார்ந்த துறைகளில் மட்டுமின்றி கலை மற்றும் மொழி சார்ந்த படிப்புகளுக்கும் பிரான்ஸ் புகழ் பெற்றது. இங்கு மேற்படிப்பு படிக்க, ஆங்கில மொழித் தேர்வு மதிப்பெண் (IELTS/TOEFL) சமர்ப்பிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவது பாடத்திட்டதிற்கு ஏற்ப வேறுபடுகிறது. (பெரும்பான்மையான படிப்புகளுக்கு ஆங்கிலப் புலமைத் தேர்வு அவசியம் இல்லை !!!!). பிரான்சில் 81க்கும் அதிகமான பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவை அனைத்தும் பிரான்ஸ் அரசின் கல்வி அமைச்சகத்தின் மேற்பார்வையிலும் கண்காணிப்பிலும் இருப்பவையாகும்.

3. கல்வி உதவித் தொகை ஏதாவது கிடைக்குமா?
தாரளமாக. நம்ம ஊர் காசுல ஏராளமாகவும் !!!

பொதுவாக, இந்த கல்வி உதவித்தொகை பற்றி பலருக்கும் இருக்கும் சந்தேகம். படிக்கிறதுக்கு யாரவது காசு தருவாங்களா? ஆம் தருவார்கள். நம் ஊரிலும் நுழைவுத் தேர்வுகள் முடித்து IISc, IIT போன்ற கல்வி நிறுவனங்களிலும் அல்லது GATE, CSIR மற்றும் NET போன்ற நுழைவுத் தேர்வுகள் முடித்து முதுகலைப்/ஆராய்ச்சிப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை மாத மாதம் வழங்கப்படுகின்றது. அதே போலத் தான் மற்ற நாடுகளிலும்.

மற்ற ஐரோப்பிய/அமெரிக்க நாடுகளைப் போலவே பிரான்ஸில் வழங்கப்படும் கல்வி உதவித் தொகையானது உங்களுடை கல்விச் செலவுக்கு மட்டுமின்றி உங்களது தனிப்பட்ட செலவுகளுக்கும் (உணவு, உடை, மருத்துவம், ஊர் சுற்றல்) போதுமானதாகவே இருக்கும். பகுதி நேர வேலைக்குச் சென்று பணம் ஈட்ட வேண்டிய அவசியம் இருக்காது. இந்த தொகையின் அளவானது படிப்பையும் (Masters/PhD), நாம் எந்த மாதிரியான உதவியின் கீழ் வருகின்றோம் என்பதனையும் பொறுத்து மாறுபடும்...

பொதுவாக முதுகலைப் படிப்பு மாணவர்களுக்கு, 600- 900 யூரோ வரை ஒவ்வொரு மாதமும் கிடைக்கும். பொதுவாக அனைத்து செலவுகளுக்கு பிறகும் பாதிக்கு மேல் சேமிக்கலாம். Erasmus Mundus கல்வி உதவித் தொகையின் கீழ் வரும் மாணவர்களுக்கு 1400 யூரோவிற்கும் மேல் வரும், இது PhD செய்யும் மாணவர்களுக்கு வரக் கூடிய கல்வி உதவித் தொகையை விட அதிகம் !!!!

4. பொதுவாக என்ன செலவு ஆகும்?
தங்கும் இடம்: மாதம் 150 - 250 யூரோ வரை (ஒருவருக்கு, நீங்கள் தேர்வு செய்யும் வசதிகளை பொறுத்து, மேலும் மற்ற ஐரோப்பிய நாடுகளைப் போலத்தான், நீங்கள் இருக்கப் போகும் ஊரை பொருத்தும் வேறுபடும் )

மருத்துவ காப்பீடு : 300 யூரோ வரை வருடத்திற்கு ஒரு முறை தான். (மருத்துவ காப்பீடு அனைவருக்கும் அவசியம்/கட்டாயம்). முதுகலைப் படிப்பு மாணவர்களுக்கு பெரும்பாலும் அவர்களுடைய மருத்துவக் காப்பீட்டுத் தொகை அவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் அமைப்பினால் கட்டப்பட்டுவிடும்.

உணவு - 100 யூரோ மாதத்திற்கு (இது மிக அதிக பட்சம், தினமும் நீங்களே சமைத்து உண்ணும் பட்சத்தில்)

தொலைபேசி அட்டை அல்லது Voip services: 10 யூரோ.

மொத்தமாக மாதம் 350 - 500 யூரோ வரை செலவு ஆகும். இது அதிக பட்சமே. இதில் தண்ணி, தம் இணைக்கப் படவில்லை. தண்ணி பிரான்சை விட உலகில் வேறு எங்கும் விலை குறைவாகவும் தரமாகவும் வகை வகையாகவும் கிடைக்குமா எனத் தெரியவில்லை. ஆகையால் கவலை வேண்டாம். !!!! :-)

5. விசா எவ்வளவு காலம் தருவார்கள் ?
நீங்கள் இந்தியாவில் முதன் முறையாக விசா பெறுகையில் மூன்று மாதம் கொண்ட 'தற்காலிக விசா' மட்டுமே கொடுக்க படும். பிறகு பிரான்ஸ் வந்தடைந்து, கல்லூரியில் இணைந்து பிறகு விசாவை நீட்டித்து கொள்ளலாம். வருடத்திற்கு ஒரு முறை இதே போல் புதுப்பிக்க வேண்டும். இது மிக எளிதான ஒன்றே. இந்த "தற்காலிக விசா" காலத்தின் அளவு தற்சமயம் மாற்றப்பட்டுள்ளதாக தெரிகின்றது.

6. விசா எடுக்க எவ்வளவு பணம் தேவைப்படும் ?
விமான கட்டணம், பெட்டி, புதுத் துணி, நல்ல shoe வாங்குற செலவு இல்லை இது !!!!!!!! அதெல்லாம் தனி...

உங்களுக்கு ஒரு பல்கலை கழகத்தில் இடம்/அனுமதி கிடைத்தவுடன் விசா வாங்க, 50 யூரோ அளவிற்கு கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும். அவ்வளவே. கல்வி உதவித் தொகையுடன் கூடிய உங்கள் பல்கலைக்கழக அனுமதியும் உங்களுடைய சான்றிதழ்களுமே விசா பெற போதுமானது.

உங்கள் படிப்பிற்கு கல்வி உதவித் தொகை இல்லையெனில்:
7200 யூரோ உங்கள் வங்கிக் கணக்கில் ஒரு மாதத்திற்கும் மேற்பட்ட சேமிப்பாக காட்டப்பட வேண்டும். (இது கல்வி உதவித் தொகை இல்லையெனில் மட்டுமே)

எதற்காக இந்த 7200 ?

இது உங்களுக்கு ஆகும் ஒரு வருட செலவு அதாவது உங்களோட தங்கும் இடம், உணவு, போன்ற செலவுகள் என்பது பிரான்ஸ் கல்வித்துறையின் கணக்கு. அதாவது ஒரு மாதத்திற்கு 600 யூரோ விகிதம் பன்னிரண்டு மாதத்திற்கு

12*600 = 7200 யூரோ என்பது அவர்கள் கணக்கு.

ஆனால், இது கல்வி உதவித் தொகையில்லாமல் இங்கு முதுகலைப் படிப்பு படிக்க விரும்புவர்களுக்கே.

7. பாட மொழி ஆங்கிலமா?
ஆங்கிலத்தில் அமைந்த முதுகலை பட்டப்படிப்புகளை நிறைய பல்கலைக் கழகங்கள் வழங்குகின்றன. நீங்கள் விண்ணப்பம் அனுப்புகையில் அதை உறுதி செய்து கொண்டு அனுப்புவது மிக நல்லது. சில பல்கலைகழகங்கள் 50 சதவிகிதம் ஆங்கிலத்திலும், 50 சதவிகிதம் பிரெஞ்சு மொழியிலும் பாடங்கள் வழங்குகின்றன.

8. மொழி அறிவு/மொழிப் புலமை எவ்வளவு முக்கியம்?
நீங்கள் இணையும் கல்லூரியில் உங்களுடைய பாடக்கல்வி ஆங்கிலத்தில் இருந்தாலும், தினசரி வாழ்க்கை அதாவது நமக்கு தேவையான பொருட்கள் வாங்கிக்கொள்ள, நண்பர்களுடன் பேச, ஊர் சுற்றச் சென்றால் மக்களுடன் உரையாட பிரெஞ்சு அறிதல் நல்லது. தெரியாவிட்டாலும் சமாளிக்கலாம். நாங்க எல்லாம் பத்து வார்த்தையை மட்டுமே வைச்சுகிட்டு சமாளிக்கலையா?? :-)

படிப்பு முடித்து இங்கேயே வேலை பார்க்க விரும்புவோர், பிரெஞ்சு மொழி கற்றுக்கொள்வது நன்மை தரும். அதே சமயம், மேற்படிப்பு படிக்க கல்வி உதவித்தொகை பெறதா மாணவர்களுக்கும் பிரெஞ்சு கற்றுக் கொள்வதன் மூலம் பகுதி நேர வேலை வாய்ப்பினை அதிகரித்துக் கொள்ளலாம். இந்தியாவில், Allience de Francaise என்னும் அமைப்பு பிரெஞ்சு மொழியினை கற்றுத்தருகிறது.

9. பிரெஞ்சு தெரிதல் விண்ணப்பிக்கும் பொழுது தேவையா?
நீங்கள் தேர்வு செய்த பாடம் ஆங்கில வழி கல்வி எனில் அவசியம் இல்லை. 50 சதவிகிதம் ஆங்கிலம்/பிரெஞ்சு எனில் தேவை. எனினும், நீங்கள் சேரும் பல்கலைகழகத்தில் சொல்லித்தருவார்கள்.

10. ஏதேனும் கன்சல்டன்சி இருக்கா?
இந்த மாதிரி நோகம நொங்கு திண்ண ஆசைப்படுபவர்களுக்கு SK சொன்ன பதிலை அங்கேயே போய் பார்க்கவும் !!!!

11. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
இளங்கலைப் படிப்பை முடித்தவர்கள் மட்டுமல்லாது, முதுநிலைப் பட்டம் பெற்றவர்களும், படிப்பு முடித்து சில காலம் பணி புரிந்தவர்களும் கூட, பிரான்சிலுள்ள பல்கலைக் கழகங்களுக்கு பட்ட மேற்படிப்பு/முதுகலை படிக்க விண்ணப்பிக்கலாம்.

12. படிச்சு முடிச்ச உடனே வேலை கிடைக்குமா?
இங்கு வேலை வாங்க பிரெஞ்சு மொழித் திறன் மிக மிக அவசியம். அது இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது. அதே சமயம், இங்கு மேற்படிப்பு படிக்க வரும் மாணவர்கள் வேறு நாடுகளில் உள்ள நிறுவங்களுக்கு பணிபுரிய வாய்ப்பும், நல்ல தரமான பல்கலைக்கழங்களில் ஆராய்ச்சி செய்ய மிக எளிதாகவும் இடமும் கிடைக்கும்.

13. பகுதி நேர வேலை வாய்ப்பு குறித்து?
கல்வி உதவித் தொகை பெற்று வருபவர்கள் பகுதி நேர வேலை செய்ய வேண்டிய தேவை இருக்காது.

கல்வி உதவித் தொகை இல்லாமல், இங்கு வருகின்றவர்கள் வாரத்தில் 20 மணி நேரம் வரை வேலை செய்ய சட்டத்தில் இடம் இருக்கின்றது. ஆனால், பகுதி நேர வேலை பார்க்க (ஏதேனும் இந்திய/தமிழக வேலைவாய்ப்பாளர்கள் தவிர்த்து ) பிரெஞ்சு மொழிப் புலமை மிக அவசியம்.

இது வரையில் உங்களுக்கு கேள்வி இருக்கும் பட்சத்தில் கீழே தெரிவியுங்கள். அடுத்த பகுதியில் பிரான்ஸில் முதுகலைப் படிக்க படிக்க எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும், யாரை அணுகலாம், போன்ற மேலதிக தகவல்களுடன் எழுதுகின்றேன்.

அன்புடன்,
பதி

Monday, August 31, 2009

ஜெர்மனியில் உயர்கல்வி(3) - விண்ணப்பிக்கும் முறை மேலும் தேவையான படிவங்கள் பற்றிய தகவல்கள்

ஜெர்மன் உயர்கல்வி சம்பந்தமாக எழுதப்பட்ட பகுதி ஒன்று, பகுதி இரண்டு.

சென்ற பதிவில் திரு. பதி அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு விளக்கங்கள்.

1) சேர்க்கை விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்ட பின், ஜெர்மனி வருவத உறுதி செய்து கொண்டு, ஜெர்மன் மொழியினை நமது ஊரிலேயே கற்கத் துவங்கிவிட்டால் எளிதாக இருக்கும் இல்லையா??

சேர்க்கை விண்ணப்பம் ஏற்றுக்கொண்ட செய்தி வந்த பின் போதிய அவகாசம் இருக்காது. இரண்டு மாதங்கள் இருந்தால் பெரிது. அந்த நேரத்திலும் விசா மற்றும் பல விடயங்களுக்கு அலைய வேண்டி இருக்கும். அப்பொழுது ஜேர்மன் மொழி பயில்வது மிக கடினம். நான் செய்த தவறும் அதுவே.

2) DAAD தவிர வேறு வழிகளில் கல்வி உதவித் தொகையுடன் கூடிய மேற்படிப்பு படிக்க இயலாதா???

DAAD மட்டுமே இந்தியாவில் இருந்தே நாம் உதவி தொகை உறுதி செய்ய முடியும். நிறைய நிறுவனங்கள், சேவை அமைப்புகள் உதவித்தொகை தருகின்றன. அவை அனைத்திற்கும் நீங்கள் சேர்க்கை கடிதம் காண்பிக்க வேண்டும். மேலும் நீங்கள் விண்ணப்பித்து இரண்டு முதல் ஆறு மாதம் வரை பிடிக்கும் அவர்கள் உங்களுக்கு அதற்கான விடை அளிக்க.

ஒரு வேலை நீங்கள் இணையும் கல்லூரி உங்களுக்கு சிபாரிசு செய்து ஏதேனும் உதவி தொகை வாங்கித்தரலாம். அது மிக குறைவே.

நீங்கள் முனைவர் பட்டம் பெற படிப்பவர் என்றால், 95% மேல் உதவித்தொகை கிடைக்கும்.

3) Erasmus Mundus படிப்பைப் பற்றியும் முடிந்தால் உங்கள் பதிவில் குறிப்பிட முயலுங்கள்....

Erasmus Mundus பற்றி ஒரு தனி பதிவே எழுத யோசித்துள்ளேன்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் மேலும் விண்ணப்பிக்கும் முறை:

சென்ற பதிவில் கூறிய தலைகளுக்கு சென்று, உங்க பல்கலை கழகம் மேலும் படிப்பு இவற்றை தேர்வு செய்த பின், அங்கே கேட்க பட்டுள்ள தகவல்கள் அனைத்தையும் சீராக அமைத்து அங்கே கொடுக்க பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். கீழே உள்ள தகவல்கள் அனைத்து பல்கலைகழகங்களுக்கும் இவையே இருக்கும். சில பல்கலைகழகங்களில் நீங்கள் தேர்வு செய்யும் படிப்பை பொறுத்து ஏதேனும் தகவல்கள் அதிகம் தேவைப்படலாம்.

1. Application Form

நீங்கள் தேர்வு செய்த கல்லூரியின் தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை தரவிறக்கி, அதை கையாலோ அல்லது சில படிவத்தில் நேரடியாகவும் செய்ய முடியும். சரியான தகவல்கள் பூர்த்தி செய்ய வேண்டும்.

இங்கு கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று, உங்களுடைய முதல் பெயர், குடும்பப்பெயர் இவை அனைத்தும் உங்கள் பாஸ்போர்ட்டில் உள்ளது போல் பூர்த்தி செய்ய வேண்டும்.

உங்களை தொடர்பு கொள்ளும் முகவரியை சரியாக எழுதவும். தேர்வின் முடிவை அவர்கள் இந்த முகவரிக்கே அனுப்புவார்கள். பின் கோட் மறக்காமல் எழுதவும்.

சில பல்கலைகழகங்களில் இவையே இரண்டு பிரிவாக இருக்கும்.

1. இணையதள விண்ணப்பம்.

2. பேப்பர் விண்ணப்பம்.

இவை இரண்டுமோ அல்லது, ஒவ்வொன்றாகவோ செய்யும் படி இருக்கலாம். நீங்கள் தேர்வு செய்துள்ள பல்கலைகழக தளத்திற்கு சென்றால் இதை பற்றிய விரிவான தகவல்கள் நிச்சயம் இருக்கும்.

2. Covering Letter

இது மிகவும் முக்கியமான ஒன்று. இதை மூன்றாக பிரித்து, உங்களுடைய அறிமுகம், எந்த பிரிவிற்கு விண்ணப்பிக்க விரும்புகிறீர்கள், உங்களுடைய படிப்பில் இது சம்பந்தப்பட்ட பின்னணி என்ன, இந்த பிரிவை என் தேர்வு செய்தீர்கள் என்பதை தெளிவாக குழப்பம் இல்லாமல் எழுதவும்.

3. Curriculum vitae

CVயில் கவனத்தில் கொள்ளவேண்டியவை பல.

a. இதை முடிந்த வரை Chronological Formatல் தயார் செய்யவும். அதை பற்றிய மேலும் விவரம் இங்கே.
b. உங்களுடைய கலர் படம், முடிந்த வரை சிரித்தவாறே, நல்ல பின்னணி நிறம், சரியான உடை. ஆண்கள் முடிந்த வரை சூட். பெண்கள் முடிந்தால் ஷர்ட். இந்திய படங்கள் படி முறிக்காமல் சிறிது சிரித்தவாறே. பல்லைக்காட்டிக்கொண்டு இலிக்கவும் கூடாது.
c. Reference : அவர்கள் உங்களை பற்றி மேலும் விவரம் அறியவிரும்பும் பட்சத்தில் யாரை தொடர்பு கொள்ளலாம் என்று இரண்டு நபர்களின் முழுமையான முகவரியை எழுதவும். முடிந்தால் தொலைபேசி எண் மேலும் ஈமெயில் முகவரி கொடுத்தால் உசிதம்.
d. உங்களின் மொழித்திறன், குறிப்பாக ஜேர்மன் படித்து இருந்தால் எந்த நிலையில் உள்ளீர்கள், கணினியில் எத்துனை வேகமாக பணிபுரிவீர்கள், என்ன என்ன விடயங்கள் தெரியும் என்பனவற்றை எழுதவும்.
e. கையொப்பம் இட மறக்க வேண்டாம்.

4. Statement of Purpose

இதை கொஞ்சம் நேரம் எடுத்து தயார் செய்யவும். உங்கள் சுயசரிதையே என்றாலும், நீங்கள் விண்ணப்பிக்கும் பல்கலைகழகப்படிப்புடன் எவ்வாறு இதை தொடர்புபடுத்தலாம் என்பதை யோசித்து செய்யவும். உதாரணத்திற்கு நீங்கள் தேர்வு செய்துள்ள படிப்பு பற்றிய தளத்திற்கு சென்று அவர்கள் என்ன என்ன விடயங்களில் வேலை செய்கிறார்கள், அதில் குறிப்பாக உங்களுக்கு எந்த பிரிவு மிகவும் நன்றாக தெரியும், அது எவ்வாறு உங்கள் படிப்பிற்கு உதவியாக இருக்கும் இது போன்ற தகவல்களை சேர்த்து எழுதவும். இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் நலம்.

5. Copy of degree Certificate, Consolidated Mark Sheet - Attested/Notary signed.
6. Experience certificate (If any)

A4 Paperil நகல் எடுத்து, நோட்டரி அல்லது attest வாங்கி இணைக்கவும்.

7. Reccomendation Letter (From 2 Persons, preferably prof.) in Sealed Envelope

உங்கள் பேராசியர்களில் இருவரிடம், இதை எழுதி வாங்கி, ஒட்டப்பட்ட கவரில் அனுப்பவும்.

8. TOEFL/IELTS.

முடிந்த வரை இந்த தேர்வு எடுத்த பின், விண்ணப்பங்களை அனுப்புதல் நலம். இல்லையேல் தேர்வு எடுக்க இருக்கும் தேதியும் என்று இந்த தகவலை நீங்கள் அவர்களுக்கு தெரிவிப்பீர்கள் என்ற தகவலை எழுதி அனுப்பவும்.

9. Germany Language Certificate (if needed)

நீங்கள் தேர்வு செய்துள்ள படிப்பிற்கு ஜேர்மன் தேவை இல்லை என்றால் இது அவசியம் இல்லை. ஆனால் இதை இணைத்தல் நீங்கள் தேர்வு பெறுவதற்கு ஒரு நல்ல + விடயம்.

இந்த அனைத்து தகவல்களையும் ஒரு கவரில் வைத்து சாதரண தபாலிலோ, Register தபாலிலோ அனுப்பவும். அவர்கள் குறிப்பிட்டுள்ள தேதிக்கு முன் அனுப்பவும்.

நீங்கள் கொடுத்துள்ள முகவரிக்கோ, ஈமெயில் முகவரிக்கோ உங்கள் தேர்வு பற்றிய தகவல் அவர்கள் கொடுத்துள்ள காலக்கெடுவிற்கு பின் அனுப்பி வைப்பார்கள். அவற்றை வைத்து நீங்கள் விசாவிற்கு செய்ய வேண்டும்.

இந்த தகவல் அனைத்தும் நீங்கள் எங்கு விண்ணப்பித்தாலும் தேவைப்படும். ஆகவே இவை அனைத்தையும் நேரம் எடுத்து, மிக கவனமாக, எந்த விதாமான பிழைகளும் இல்லாமல், தவறான தகவல்களும் இல்லாமல், தயார் செய்தல் நலம். உங்கள் தகவல்களை நீங்களே தயார் செய்யும். மற்றவர்களிடம் செய்ய சொல்வது மேலும் கன்சல்டன்சி மக்களிடம் செல்வதை தவிர்த்தல் நலம். இவற்றில் ஏதேனும் சந்தேகம்/குழப்பம் இருப்பின் தெரியப்படுத்தவும். என்னால் முடிந்த வரை பதில் கூற விழைகிறேன்.

மேலும் உதவிக்கு அல்லது தகவலுக்கு தொடர்பு கொள்ள விரும்புவர்கள் என்னை friends.sk@gmail.com என்ற ஈமெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

அன்புடன்,
எஸ். கே.

Monday, August 17, 2009

ஜெர்மனியில் உயர்கல்வி(2) - கேள்வி-பதில்/மேலதிக விவரங்கள்

சென்ற பதிவில், சக பதிவர் அமுதா கிருஷ்ணா கேட்ட சில தகவல்கள் :

'எந்தெந்த நகரங்கள் படிக்க ஏற்றவைகள் (சீதோஷணம்,கட்டணம் குறைவு--போன்றவை)??? '

ஜெர்மனியில் நகரங்களுக்குள் வானிலை ஒண்ணும் பெரிய வேறுபாடு இருக்காது. மொத்தமாக நாலு வித பருவ காலங்களும் உண்டு. தங்குமிடம் பேரு நகரங்கள் குறிப்பாக முனிக், ஸ்டுட்கார்ட், பிராங்க்பர்ட் போன்ற நகரங்கள் கொஞ்சம் அதிக வாடகை இருக்கும். ஆனால் மாணவர்களுக்கு விடுதிகள் இருக்கு. ஆதலால் போன பதிவில் நான் கூறிய விலையில் ஒரு ஆள் எளிதாக காலம் தள்ள முடியும்.

கட்டணம் - ஊருக்கு ஊர் வேறுபடும். ஆனால் கல்லூரி கட்டணம் நான் மேற்கூறிய படி 500 - 750 வரை இருக்கும். இதை தவிர சில குறிப்பிட்ட பாடங்கள் ஒரு செமஸ்டருக்கு 1500 ஈரோக்கள், அதற்கு அதிகமாகவும் உண்டு. நாம் விண்ணப்ப்பிக்கும் பொழுது நன்கு விசாரித்து விண்ணப்பித்தல் நலம்.

இஞ்சினியரிங் அல்லாத மற்ற துறைகள் பற்றியும் ...........??

எனக்கு தெரிந்த வரை MBA, மற்ற மொழிகள், பற்றி எழுத முயற்சி செய்கிறேன்.

போன பதிவை பற்றி சில அம்மக்களிடம் சொல்லி எதாவது கேள்வி இருந்தா கேளுங்க அப்படின்னு சொன்னதின் விளைவு.. இதோ சில 'பாசக்' கேள்விகள் ?? (என்ன எல்லாம் கவலை பாத்தீங்களா அம்மக்களுக்கு .. :-) )

இந்திய சாப்பாட்டு வகைகள் கிடைக்குமா ??

உணவு விடுதிகளில் அதிகம் வட இந்திய உணவுகளே உண்டு. சில தென்னிந்திய வகைகளும் கிடைக்கும். ஆனால் தேடி கண்டு பிடிக்க வேண்டும்.

சமைக்க தேவையான அனைத்தும் கிடைக்குமா ?

அரிசி, பருப்பு, குறிப்பிட்டு சொல்லும் படியான இந்திய காய்கறிகள் வெண்டைக்காய், முருங்கை இவை அனைத்தும் இந்திய கடைகளில் கிடைக்கும். பேரு நகரங்களில் இது போன்ற கடைகள் நிறையவே உண்டு. சிறு நகரங்களில் இருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் நகரங்களை பொறுத்தது.

சாதரண காய்கறிகள் உருளை, தக்காளி போன்றவை சூப்பர் மார்கெட்டிலேயே கிடைக்கும். நல்ல தரமானதாகவும் இருக்கும்.

ஜெர்மன் மொழி எங்கு கற்பது?

ஜெர்மன் நாட்டில் மேல் படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள் ஊர் அளவேனும் ஜெர்மன் இந்தியாவிலேயே படித்தல் நலம். அதற்க்கு சிறந்த இடமும் கோத்தே இன்ச்டிடுடே எனப்படும் ஜெர்மன் மொழிக்கென்றே உண்டான பள்ளிகளே. நான் விசாரித்து அறிந்த வரையில் இங்கு மிக நேர்த்தியாகவும், நன்றாகவும் கற்றுத்தருகிறார்கள். இதை தவிர மேலும் பல தனியார் வகுப்பளும் நடக்கின்றன.

ஜெர்மன் பல்கலைகழகங்கள் பற்றிய ஒரு அறிமுகம் :

ஜெர்மனியில் முன்னூறுக்கும் மேற்பட்ட பல்கலை கழகங்கள் உள்ளன. இவை அனைத்தையும் மூன்று விதமாக பிரிக்கலாம்.

1. Technical University (Technische Universität - TU)

2. University (Universität)

3. University of Applied Science (Fachhochschule - FH).


இந்த அனைத்து பல்கலை கழகங்களிலும் கலை, அறிவியல், இன்ஜினியரிங், மொழி, மருத்துவம் என்று அனைத்து பதிப்புக்களும் படிக்கலாம்.

Technical University (TU) - இங்கு பாடங்கள் படிப்பவர்கள் மேலும் ஆராய்ச்சியை செய்கின்ற நோக்கிலேயே பாடங்கள் இருக்கும். இவையே இங்கும் அதிக மதிப்பு பெற்ற பல்கலை கழகங்களாக எண்ணலாம். நம்ம ஊரு பாஷைல சொல்லனும்னா நம்ம ஊரு ஐ. ஐ. டி.'க்கள் போன்று என்று சொல்லலாம். இவை ஜெர்மனியில் 14 or 15 உள்ளன.

University of Applied Sciences (FH) - இவை படித்து முடித்து வேலைக்கு செல்கிறார்கள் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டவை. படிப்பும் பயிற்சி சார்ந்தவையாக இருக்கும்.

University - இரண்டும் கலந்த ஒன்றாக இருக்கும்.

இதில் எதுவும் உறுதியாக இது தான் என்று கிடையாது. FH படித்தவர்கள் மேலும் படிக்க விரும்பும் பட்சத்தில் சில தேர்வுகள் எழுதி மேலும் படிக்கலாம். அவ்வளவே.

ஜெர்மனியில் செமஸ்டர்கள் இரு தடவை தொடங்கும்.

1. Winter - அக்டோபர் முதல் வாரம்
2. Summer - ஏப்ரல் முதல் வாரம்

இதற்கான விண்ணப்பிக்க கடைசி நாட்கள் யுனிவர்சிட்டி பொறுத்து வேறு படும். ஆனால் முறையே

ஜூன் அல்லது ஜூலை 15 தேதிகள் அக்டோபர் செமஸ்டருக்கும்,
டிசம்பர் அல்லது ஜனவரி 15 ஏப்ரல் மாத செமஸ்டருக்கும் கடைசி தேதியாக இருக்கும்.

மேலதிக தகவல்களுக்கு ??

விண்ணப்பங்கள், ஜெர்மனியில் மேற்படிப்பு என்ற மேலதிக தகவல்களுக்கு ஒரே சிறந்த இடம் DAAD எனப்படும் ஜெர்மன் நாட்டு கல்விக்கு உதவி தரும் மையமே.

கீழே உள்ள லிங்கிற்கு சென்று ஜெர்மன் பற்றிய அனைத்து தகவல்களையும் பெறலாம்.

DAAD

இதற்கான தொடர்பு அலுவலகம் சென்னையிலேயே உள்ளது. அதற்கான லிங்க்

DAAD சென்னை

இங்கு மாதத்திற்கு இரண்டு முறை இதற்கான தகவல் வகுப்புகள் நடக்கின்றன. அங்கு பங்குபெருபவர்களுக்கு அனைத்து தகவல் கொண்ட CD'யும் இலவசமாக கிடைக்கும்.

தகவல் : கல்லூரியில் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் உங்கள் கல்வி கல்லூரியில் இந்த தகவல் குறித்த செமினார் நடத்த விரும்பினால் சென்னை - DAAD அலுவலகத்தை முறையே தொடர்பு கொண்டால் அவர்கள் உங்கள் கல்லூரியிலயே வந்து அனைத்து தகவல்களும் தருவார்கள்.

மேலும் கேள்வி இருக்கும் பட்சத்தில் இங்கு தெரியப்படுத்தவும். முடிந்த வரை எனக்கு தெரிந்தவற்றை கேட்டு சொல்கிறேன்.

அடுத்த பதிவில் : நான் மேலே சொன்ன இணையதளத்தில் எவ்வாறு தேடுவது, விண்ணப்பிக்க தேவை படும் விவரங்கள், அதை எல்லாம் எவ்வாறு சரியாக செய்ய வேண்டும், போன்ற தகவல் தரலாம் என்று உள்ளேன்.

அன்புடன்
எஸ். கே.

Monday, August 10, 2009

ஜெர்மனியில் உயர்கல்வி(1) - கேள்வி பதில்

சாதரணமா உயர் கல்வி அப்படினா உடனே எல்லாருக்கும் நினைவு வர்றது அமெரிக்கா, கனடா, லண்டன் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் தான். இந்த நாடுகள் எல்லாத்துலையும் ஒரு ஒற்றுமை என்ன?, ஆங்கில வழி கல்வி.

ஐரோப்பா உயர்கல்விக்கு ஒரு நல்ல இடம். ஆன மக்கள் பல காரணங்களுக்காக பயப்படறாங்க மேலும் சரியான செய்திகள் வருவதில்லை. நான் ஜெர்மனியில் ஐந்து வருடமாக இருந்தாலும் ஸ்வீடன் நாட்டில் கல்வி இலவசம் (கல்லூரிக்கான கட்டணம் எதுவும் கிடையாது) என்பது எனக்கு போன வாரம் தான் தெரியும்.

அதனால முடிந்தால் ஒரு பதிவோ இரண்டு பதிவோ (பதிவை பொறுத்து) ஜெர்மனியில் உயர்கல்வி சாத்தியக்கூறுகள் குறித்தும், எவ்வாறு தொடங்குவது விண்ணப்பிப்பது போன்ற விடயங்கள் இங்கு பகிரலாம்னு இருக்கேன்.

நம்ம மக்கள் விண்ணப்பம் எல்லாம் எப்படி போடறது அப்படிங்கறதை தெரிஞ்சுக்கறதுக்கு முன்னாடி நிறைய கேள்விகள் கேட்டு உறுதிபடுத்திகிட்டு தான் அப்ளை பண்ணலாமா வேணாமா சொல்லி யோசிப்பாங்க. அது மாதிரி சாதரணமா தோன்ற கேள்விகள், என்னை இதுவரை கேட்கப்பட்ட கேள்விகள் எல்லாம் தொகுத்து தர்றேன். உங்களுக்கு வேற எதாவது கேள்வி தோணிச்சுன்னா சொல்லுங்க, எனக்கு தெரிஞ்ச வரைக்கும் பதில் சொல்றேன். இதுக்கு அப்பறம் விண்ணப்பிக்கரது எப்படின்னு விலாவாரியா ஒரு பதிவு போடறேன்.

ஏன் ஜெர்மனி ??

இங்கு நிறைய நல்ல உலக தரம் கொண்ட பல்கலை கழகங்கள் உள்ளன. அங்கு ஆங்கில வழியிலும் நிறைய பாடங்கள் குறிப்பாக முதுகலை பட்டப்படிப்பு படிக்க வாய்ப்புகள் உள்ளன.

ஒரு ஆண்டுக்கு முன் வரை கல்வி எல்லா பல்கலைகழகத்திலும் இலவசமாக இருந்தது. ஆனால் இப்போது கல்லூரிக்கு தகுந்தாற்போல் ஒரு செமஸ்டருக்கு 500 - 750 ஈரோ வரை கல்விக்கட்டணம் உள்ளது.

எவ்வளவு பணம் தேவைப்படும் ??

அதாவது, உங்களுக்கு ஒரு பல்கலை கழகத்தில் அனுமதி கிடைத்தவுடன் விசா வாங்கும் பொழுது 7800 ஈரோ உங்கள் பெயரில் டி. டி.யாக காட்டப்பட வேண்டும். இதை நீங்கள் ஜெர்மனி வந்த பிறகு இங்கு உங்கள் வங்கிக்கணக்கில் இந்த பணத்தை சேர்பித்து, ,விசா நீட்டிக்கும் பொழுது அதை காண்பிக்க வேண்டும்.

இதை தவிர உடை, விமான கட்டணம் அனைத்தும் தனி.

எதுக்கு இந்த 7800 ??

இது உங்களுக்கு ஆகும் ஒரு வருட செலவு அதாவது உங்களோட தங்கும் இடம், உணவு, புக்ஸ், போன்ற செலவுகள் என்பது ஜெர்மன் கல்வித்துறையின் கணக்கு. அதாவது ஒரு மாதத்திற்கு 650 ஈரோ விகிதம் பன்னிரண்டு மாதத்திற்கு

12*650 = 7800 என்பது அவர்கள் கணக்கு.

இங்கு ஆகும் செலவு எவ்வளவு?

தங்கும் இடம் - 150 - 300 ஈரோ வரை (ஒருவருக்கு, நீங்கள் தேர்வு செய்யும் வசதிகளை பொறுத்து, மேலும் நீங்கள் இருக்கும் ஊரை பொருத்தும் வேறுபடும் )

மருத்துவ காப்பீடு - 60 ஈரோ (மருத்துவ காப்பீடு அனைவருக்கும் அவசியம்).

உணவு - 100 ஈரோ (இது மிக அதிக பட்சம் நீங்கள் தினமும் நீங்களே சமைத்து உண்ணும் பட்சத்தில்)

மொபைல் - 30 ஈரோ (நீங்கள் இருபத்தி நான்கு மணி நேரம் இந்தியாவிற்கு பேசுபவர்கள் என்றால் இது செல்லுபடியாகாது.

மாதம் 400 - 600 ஈரோ வரை செலவு ஆகும். இதில் தண்ணி தம் இணைக்கப் படவில்லை. மேலும் நீங்கள் கல்லூரிக்கு செலுத்தவேண்டிய கல்விக்கட்டணம் தனி. முக்கால் வாசி கல்லூரிகளில் நீங்கள் பயணிக்க தேவையான பப்ளிக் டிரான்ஸ்போர்ட் டிக்கட்டுகளும் இதிலேயே அடங்கும்.

விசா எவ்வளவு காலம் தருவார்கள் ?

நீங்கள் இந்தியாவில் முதல் முறையாக விசா பெறுகையில் மூன்று மாதம் கொண்ட 'டூரிஸ்ட் விசா' மட்டுமே கொடுக்க படும். பிறகு ஜெர்மனி வந்தடைந்த பின் கல்லூரியில் இணைந்து பிறகு விசாவை நீட்டித்து கொள்ளலாம். அது உங்கள் ஊர், உங்கள் கல்லூரி, உங்கள் கல்விக்கு தகுந்தார் போல் ஒரு வருடம் அல்லது இரண்டு வருடம் கொடுக்கப்படும்.

பாட மொழி ஆங்கிலமா ??

ஆங்கிலத்தில் அமைந்த முதுகலை பட்டப்படிப்பு நிறைய பல்கலை கழகங்கள் வழங்குகின்றன. நீங்கள் விண்ணப்பம் அனுப்புகையில் அதை உறுதி செய்து கொண்டு அனுப்புவது நல்லது. சில பல்கலைகழகங்கள் 50 சதவிகிதம் ஆங்கிலத்திலும், 50 சதவிகிதம் ஜெர்மன் மொழியிலும் பாடங்கள் வழங்குகின்றன.

மொழியை அறிதல் எவ்வளவு முக்கியம் ??

நீங்கள் இணையும் கல்லூரியில் பாடக்கல்வி ஆங்கிலத்தில் இருந்தாலும், தினசரி வாழ்க்கை அதாவது நமக்கு தேவையான பொருட்கள் வாங்கிக்கொள்ள, நண்பர்களுடன் பேச, பார்ட்டி சென்றால் மக்களுடன் உரையாட ஜெர்மன் அறிதல் நல்லது.

ஜெர்மன் தெரிதல் விண்ணப்பிக்கும் பொழுது தேவையா ??

நீங்கள் தேர்வு செய்த பாடம் ஆங்கில வழி கல்வி எனில் அவசியம் இல்லை. 50 சதவிகிதம் ஆங்கிலம்/ஜெர்மன் எனில் தேவை. நீங்கள் சேரும் பல்கலைகழகத்திலும் சொல்லித்தர வாய்ப்பு உள்ளது.

ஏதேனும் கன்சல்டன்சி இருக்கா ??

இது நோகாம நொங்கு எடுக்கறவங்க கேக்கறது. அம்பதாயிரமோ, ஒரு லட்சமோ கொடுத்துபுட்டு, அவுங்க விண்ணப்பம் அனுப்ப மட்டும் ஒரு பெரிய தொகை வாங்கி நிறைய பேர் ஏமாறுகிறார்கள். குறிப்பாக ஹைதராபாதில் இருந்து இது போல நிறைய நடக்கிறது.

நான் அறிந்த வரையில் எந்த ஒரு பல்கலைகழகமும் ஒரு கன்சல்டன்சியுடன் ஒப்பந்தம் செய்வது இல்லை. இந்தியாவில் உள்ள சில பல்கலைகழகத்திற்கும் குறிப்பாக (IIT) மற்றும் சில நிறுவங்களுக்கும் வேண்டும் என்றால் ஒப்பந்தம் இருக்கலாம். ஆதலால் அனாவசியமாக பணத்தை கொடுத்து ஏமாறாதீர்கள். இது போல் கன்சல்டன்சியிடம் செல்வதால் இன்னொரு தவறும் நடக்கிறது. அவர்கள் 50% ஜெர்மன் மற்றும் 50% ஆங்கிலம் போன்று அமையும் பாடங்களை சரியாக சொல்லாமல் ஆங்கிலத்தை மட்டுமே நம்பி வந்து மாணவர்கள் ஏமாறுகிறார்கள்.

தயவுசெய்து, உங்கள் விண்ணப்பம் நீங்களே தயார் செய்யுங்கள், பல்கலை கழகத்திற்கோ இல்லை அவர்கள் விண்ணப்பத்தில் கூறியுள்ள முகவரிக்கு குறிப்பிட்ட நேரத்தில் விண்ணப்பம் அனுப்பப்பட்டால், உங்களுக்கு ஆம்/இல்லை என்ற பதில் நேரடியாக சொல்லப்படும். இதில் ஒளிவு மறைவே கிடையாது.

படிச்சு முடிச்ச உடனே வேலை கிடைக்குமா ??

அது உங்கள் கையில். நிறைய சாத்தியங்கள் இருக்கு. நல்ல பெரிய பெரிய கம்பெனிகள் இருக்கு. ஆனால் இங்க வேலை செய்யறதுக்கு ஜெர்மன் மொழி ரொம்ப முக்கியம். அது இல்லாம ஒண்ணும் பண்ண முடியாது.

பகுதி நேர வேலை வாய்ப்பு குறித்து ?

மாணவர்கள் படிக்கும் நேரம் போக மற்ற நேரங்களில் வேலை செய்து பணம் சம்பாதிக்க வழி உள்ளது. இதற்க்கு சட்டமும் வழி ஏற்படுத்தி தந்துள்ளது. அதாவது மாதத்திற்கு என்பது மணி நேரம் நீங்கள் மாணவர்களாக வேலை செய்யலாம்.

பகுதி நேர வேலை இரண்டு விதமாக உள்ளது. ஒன்று, நீங்கள் படிக்கும் படிப்பு சம்பந்தமாகவே நீங்கள் படிக்கும் கல்லூரியிலோ, எதாவது பேராசியரிடமோ செய்யலாம்.
இரண்டு, கடின உடல் உழைப்பு உணவு விடுதிகளில், சில கம்பனிகளில் என்பது போன்று.

மேலும் இது நீங்கள் வசிக்கும் நகரம், படிக்கும் படிப்பு, உங்கள் ஜெர்மன் திறமை இது போன்று பல விடயங்களை பொறுத்து உள்ளது.

இது வரையில் உங்களுக்கு கேள்வி இருக்கும் பட்சத்தில் கீழே தெரிவியுங்கள். அடுத்த பகுதியில் ஜெர்மனியில் மாஸ்டர்ஸ் படிக்க எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும், யாரை அணுகலாம், பலகலை தகவல்கள் பற்றிய மேலதிக விவரங்களுடன் சந்திக்கிறேன்.

அன்புடன்,
எஸ்.கே.

Sunday, August 2, 2009

கல்வி, உயர்கல்வி பற்றிய தகவல்கள் ஒரு முயற்சி.

அன்பின் தோழர்களே, தோழிகளே...

கல்வி ஒரு மனிதனை முழுமை ஆக்குகிறது. ஒரு நாட்டின் வளர்ச்சி அந்த நாட்டின் மக்கள் தொகையில் எவ்வளவு பேர் கல்வி பெறுகிறார்கள் என்பதிலும் இருக்கிறது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள படம் ஒரு உதாரணம். ஒரு மாணவன் தனது பள்ளிப்படிப்புக்கு பிறகு எத்துனை முறையில் தனது வாழ்வினை தேர்வு செய்யலாம் என்பதற்கு. எனக்கு இ -மெயிலில் வந்தது. அதை எழுதி உள்ள Prof.விஜய் நாவலே மற்றும் மகேஷ் நார்கே அவர்களுக்கு நன்றி.



ஒவ்வொரு துறை படிப்பிற்கும் அதற்கு தகுந்த வேலை, மற்றும் படிப்பு அனைத்தும் இருக்கிறது. ஆனால் என்ன படிப்பது, எங்கு படிப்பது, எவ்வளவு செலவு ஆகும், இந்த துறை படித்தால் என்ன வேலைக்கு செல்லலாம், இது போன்று மாணவர்கள் இடத்தும் பெற்றோர்கள் இடத்தும் ஆயிரம் கேள்விகள். அதோடு பல துறை பற்றி நிறைய பேருக்கு தெரியாமலையே உள்ளது.

மேலும் வெளிநாடு சென்று படிப்பது ஒரு குதிரை கொம்பினை போன்ற எண்ணம் நிலவுகிறது. நல்ல மாணவனாக இருக்கும் பட்சத்தில் வெளிநாட்டில் கல்வி கற்க நிறைய வாய்ப்புகள் உள்ளது. அவற்றை பற்றி எங்களுக்கு தெரிந்த வரையில் இங்கு ஒன்று படுத்தி அனைவருக்காகவும் எழுதலாம் என்ற முதல் முயற்சி.

அதே போல் இந்திய அரசு, தனியார் நிறுவனங்கள் என்று பல வகையில் பண உதவியும் செய்யப்பட்டு வருகிறது. இதை பற்றிய செய்தியும் பலருக்கு சென்று அடைவதில்லை. அதன் முயற்சியாக இங்கே அனைத்தையும் தொகுத்து அளிக்கலாம் என்று உள்ளோம். நீங்களும் உங்களது துறை, அதில் உள்ள உயர் கல்வி வாய்ப்புகள் பற்றிய அனைத்து தகவலையும் இங்கு பகிர்ந்தது கொள்ள விரும்பினால் தயவு செய்து இங்கே தெரியப்படுத்தவும்.

அதே போல் நாளிதழ், வார இதழ், கல்விக்கே தனியாக உள்ள நாளேடுகள் இவற்றில் ஏதேனும் உங்களுக்கு தெரியும் பொழுது இங்கே அனைவருக்கும் தெரியப்படுத்தலாம்.
முடிந்த வரை வாரம் ஒரு பதிவு என்ற விகிதத்தில் தர முயல்கிறோம். பதிவுகள் ஒவ்வொரு திங்கள் காலையும் வெளிவரும் படி முயற்சி செய்கிறோம்.
இது இரண்டு பேருக்காவது உபயோகமாக இருக்கும் என்ற எண்ணத்தில்..

அன்புடன்,
எஸ். கே.

  © Blogger template 'Fly Away' by Ourblogtemplates.com 2008

Back to TOP